Saturday 24 December 2011

ஒரு புறம்


    

  அணு உலைகளும்
  ஆக்கிரமிப்பு நிலங்களும்
   இதிகாசம் போல் 
   பதிவாகி போயின 
   ஒரு புறம் 

   பலன் ஏதும் 
   கிடைக்காமல் 
   பரிதவிக்கும்
   மக்கள் கூட்டம் 
   பதறிக்கொண்டு 
   ஒரு புறம் 

   செவ்வானத்தையும் 
   வான் நிலவையும்
   வர்ணிக்கும்
   வர்கத்தினர் 
   ஒரு புறம்
  
   பதவிக்கும்
   பகட்டுக்கும்
   அடிமைகளாய்
   சிலர் 
   ஒரு புறம் 


   வருடந்தோறும் 
   சுனாமியை 
   வருட 
   இறுதியில்
   நினைவு 
   கூறுவர்
   ஒரு புறம்


  அன்னையர் தினம்
  மகளிர் தினம்
  தந்தையர் தினம்
  கொடி தினம் 
  என 
  தினங்களை
  ஞாபகமூட்டுவர் 
  ஒரு புறம் 

 
  பருவத்தையும்
  பருவமங்கையரையும்
  இரசிக்கும்
  காளையர்கள்
  ஒரு புறம்


   முதுமையில்
   இளமையை
   கழித்த
   விதத்தை
   பகிர்வோர் 
   ஒரு புறம்
 
    வானொலி
    தொலைக்காட்சி
    பத்திரிக்கைகள்
    முன்னேற்றம்
     ஒரு புறம்

 
     முற்போக்குவாதிகளும்
      ஆன்மிகவாதிகளும்
      மரவட்டைகளாய் 
      ஒரு புறம்


     மருத்துவமும்
     விஞ்ஞானமும்
     பெருகியும்
     பிணியும்
     பற்றாக்குறையும்
     ஒரு புறம்
     
     சட்டங்களும்
     திட்டங்களும்
     ஆட்சியாளருக்கேற்ப
     மாறும்
     அலங்கோலம்
     ஒரு புறம்


     இத்தனை
     புறங்களும்
     ஒருங்கிணைந்திருக்க 
     என்றுமே 
     மாறாமல்
     லப் டப்
     ஓசையுடன்
     இதயம் 
     மட்டும்
     இட புறம்
     மட்டுமே.

    

 

கடவுள்


                                                           முழு முதற் கடவுள்
                                                           முகம் மறைத்தார்
                                                           மூன்றிலும்
                                                           பிரணவ
                                                           மந்திரத்திலும்
                                                           கேள்விக்குறியாய்
                                                           சூரிய
                                                           சந்திரனுடன்  

Sunday 11 December 2011

பாரதி நீ மீண்டும் பிறந்து வந்தால்

இங்கே எல்லாமே
தலைகீழ்விகிதங்களாய்
சிதைந்து கிடக்கிறது
பாரதி!
உன்னை முழுமையாய்ப்
புரட்டிப் பார்க்காமலேயே
நாங்கள்
பைந்தமிழ்க் கவிதைகளைப்
பரப்பிக் கொண்டிருக்கிறோம்
வாசித்தவற்றை சுவாசித்தே
மறுபதிப்புச் செய்கிறோம்

அச்சமில்லை அச்சமில்லை என்றாய்
இங்கே
அச்சப்படாமல் வாழ முடியாது பாரதி....
 அரசியல்வாதி தொடங்கி
ஆன்மிகவாதிவரை எங்களை
அச்சுறுத்தியே தங்களை
உயர்த்திக்  கொள்கிறார்கள்.
அச்சப்பட்டு அச்சப்பட்டே
நாங்கள் இப்போது
அடிமைகளாய் மாறிப்போனோம்.

மோதி மிதித்துவிடு பாப்பா என்றாய்
பாப்பாக்களை
புத்தகச்சுமையும் வீட்டுப் பாடங்களும்
 மோதித் தள்ளிவிடுகின்றன!!
 பாப்பாக்களோடு சேர்ந்து
மெட்ரிக் பள்ளிகளின்
கல்விக்கட்டணங்கள்  எங்களை
கசக்கிப் பிழிகின்றன.


எங்களுக்கும்
ஆசை அதிகம் பாரதி....
நீ பாப்பப் பாட்டு
குயில் பாட்டு பாடினாய்...
நாங்கள்
மம்மி பாட்டிலும் டாடி பாட்டிலும்
சுகம் காண்கிறோம்.

சாதிகள் இல்லையென்றாய்  நீ...
சாதியில்லை என்றால் இங்கே
சலுகைகள் கிடைக்காது பாரதி!!!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக
நீ சினங்கொண்டு சீரினாய்.
ஆனால் நாங்களோ
ஈழப்படுகொலைகளையும்
போபால் மரணங்களையும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.


பத்துப் பன்னிரெண்டு
தென்னை மரங்களும்
ஒரு பத்தினிப் பெண்ணும்
 கேட்டவன் நீ !!!!!!
இங்கோ,
பத்துப் பன்னிரெண்டு
பண்ணை வீடுகளும்
வீட்டுக்கொரு மனைவியும், துணைவியும்
பத்தினிகளாக
வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்!!!!!!


நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
நானிலத்தில் பெண்களுக்கு
வேண்டும் என்றாய்...
இன்றையப் பெண்களிடம்
இரண்டுமே நிறைய இருக்கின்றன
ஆனால்,
சீரழிவை நோக்கியல்லவா
சென்றுக் கொண்டிருக்கின்றன!!!!!


சிங்களத்தீவினுக்கோர் பாலம்
அமைப்போம் என்றாய்...
நாங்களும்
தமிழர்களைக் கொன்று குவித்து
சிங்களவனோடு உறவுப்பாலம்
அமைக்கிறோம்!!!!!


நீ மீண்டும் பிறந்து வந்தால்,
உன்னைப் பைத்தியம் என்று
பட்டம் சூட்டி
உன் நெம்புகோல் கவிதைகளை
முறித்துப்போட
அரசியல்வாதிகளும் ஆன்மிகவாதிகளும்
அணி திரண்டு விடுவார்கள்!!!!!
 வேண்டுமானால்
அவர்களைத்  துதிபாடி  நீ
சில விருதுகளைப் பெறலாம்!
திரைப்பட இசைக்கும்
நடிகைகளின் அசைவுக்கும்
பாட்டெழுதி
நீ திரவியம் தேடலாம் பாரதி!!!!!!!!

(சென்ற வருட பாரதியார் நினைவு நாளில் (2010 ) பரிசு கிடைத்தது )
வளரி மற்றும் தமிழ் தென்றல் குழுமம்  ஆகியவற்றில் வலம் வந்தது,
நன்றி. திரு.அருணா சுந்தரராசன் ,      திரு.கிரிஜாமணாளன்.


 
  
 
   .
  


 
 
 
  



 
   
     








 
  

  


  









 






    
  
 
  



  
  

  
  
 
 
  
 
       
 

Monday 5 December 2011

திருஷ்டி

திருஷ்டி
சுற்றி
 போட்டார்கள்
எலுமிச்சை
பழத்தில்
அதற்கும்
திருஷ்டி
பட்டது
வாகனங்கள்
அதன்
மேல்    
அழுத்தி
சென்றதால்
 

 
   

Saturday 3 December 2011

கர்வம்

தலையில்
சுமந்து
ஆடினான்
கீழே
விழுந்து
நொறுங்கியது
கரகத்துடன்
சேர்ந்து
கர்வமும்
       


பொட்டு

முகம்
பார்க்கும்
கண்ணாடியும்
குளியலறை   
கதவும்
பால்மாறின
பெண்கள்
ஓட்ட
வைக்கும்
ஒட்டு
பொட்டிலும்
மஞ்சள்
பூச்சு
குளியலிலும்
தங்கள்
இயல்பை
மறந்து
  

           

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி
ஒன்று
மாட்டிக்
கொண்டது
என்
எட்டுக்கு
எட்டு
அறையில்
சிறகடித்து
படபடக்கிறது
ஜன்னல்
கண்ணாடியிலும்
விளக்கிலும்
கணினியின்
மேலும்
உன்
நினைவுகளில்
சிக்கி
தவிக்கும்
என்
உள்ளம்
போல.